கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையின்றி தற்காலிகமாக மூடல்
|மாணவர்கள் போராட்டம் காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசியதாக புகார் எழுந்தது. இதனால் பேராசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் தனக்கு எதிரான போராட்டம் காரணமாக பேராசிரியர் நீண்ட விடுப்பில் சென்றார்.
இந்நிலையில், கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம், மாணவர்களின் தொடர் வகுப்பு புறக்கணிப்பு காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையறையின்றி முடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.