< Back
மாநில செய்திகள்
ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்
மாநில செய்திகள்

ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்

தினத்தந்தி
|
31 May 2024 4:06 AM IST

சிவகங்கை அருகே ஒரு ரேஷன்கடையில் கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் மண்ணெண்ணெய் வினியோகித்து தலா ரூ.2 வசூலித்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே கொல்லங்குடியில் உள்ள ரேஷன்கடை மூலம் கொல்லங்குடி, சாத்தப்புலி, அரியாக்குறிச்சி, அழகர்சாமி நகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 950 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

சில ஆண்டுகளாக ரேஷன்கடைகளுக்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொல்லங்குடி ரேஷன்கடைக்கு இந்த மாதம் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதனை 950 ரேஷன்கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு கார்டுக்கும் 50 மில்லி அளவு மட்டுமே வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளனர். 50 மில்லிக்கு தலா ரூ.2 வீதம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரேஷன்கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கொல்லங்குடி கிராம மக்கள் கூறும்போது, "கடந்த காலங்களில் ஒரு கார்டுக்கு 3 லிட்டர் வீதம் மண்எண்ணெய் வழங்கினர். அது படிப்படியாக 2 லிட்டர், ஒரு லிட்டர், அரை லிட்டராக குறைந்தது. பின்னர் 200 மில்லி வழங்கினர். தற்போது 50 மில்லி மட்டுமே தருகின்றனர். இதை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும்" என்றனர்.

இதுகுறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், "சமையல் சிலிண்டர் வைத்திருப்போருக்கு மண்ணெண்ணெய் கிடையாது. ஆனால் அவர்களும் வாங்குகின்றனர். வீடுகளுக்கு சிலிண்டர் இணைப்பை கணக்கிட்டு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது," என்றனர்.

மேலும் செய்திகள்