கருணாநிதி நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
|கருணாநிதியின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 -ம் ஆண்டு ஆகஸ்டு 7-ம் தேதி காலமானார். அவரது 6வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த அமைதி பேரணி ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவு பெற்றது. இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி., மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பேரணி நிறைவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மலர்வளையம் வைத்து முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.