< Back
மாநில செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
மாநில செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

தினத்தந்தி
|
18 Aug 2024 7:37 PM IST

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தற்போது வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தைப் பெற்றுக் கொண்டார். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் கருணாநிதி உருவத்துடன் அவர் கையெழுத்திலான 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்