மன்னிப்பு கேட்ட கார்த்தி - பாராட்டிய பவன் கல்யாண்
|பவன் கல்யாண் நடிகர் கார்த்தியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சென்னை,
மெய்யழகன் படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தொகுப்பாளரின் லட்டு குறித்த கேள்விக்கு கார்த்தி பதிலளித்து பேசியது சர்ச்சையானது.
கார்த்தியின் இந்த பேச்சு வைரலானதையடுத்து, "சனாதனத்தில் ஜோக் செய்ய வேண்டாம்" என ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரி இருந்தார்.
இந்நிலையில், பவன் கல்யாண் நடிகர் கார்த்தியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
'தங்களது துரிதமான பதிலுக்கு பாராட்டுகள். திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்கள், போற்றப்படும் லட்டு போன்றவை கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையவை. அதுபோன்ற விஷயங்களை நாம் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
பிரபலமானவர்கள் என்ற முறையில் நாம் ஒருங்கிணைந்து குறிப்பாக நாம் போற்றும் நமது கலாசாரம் மற்றும் ஆன்மிக கோட்பாடுகளை காக்க வேண்டும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.