கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்: விசாரணை அதிகாரி நியமனம்
|கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராய விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர்.
நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து விஷ சாராய விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டி.ஜி.பி., உளவுத்துறை டி.ஜி.பி., மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கருணாபுரத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.