கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
|கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது விஷ சாராய மரணம் குறித்து கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து கவர்னரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் திமுகவிற்கு உள்ள தொடர்பு குறித்தும் கவர்னரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தனர். மேலும் விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கவர்னரிடம் அண்ணாமலை வலியுறுத்தி உள்ள்ளார்.
சந்திப்பிக்குப் பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தோம்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதல்-அமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும் கவர்னரை கேட்டுக்கொண்டோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.