விஜய்யின் த.வெ.க மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா?
|இந்த மாதத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டால் த.வெ.க. மாநாடு தள்ளிப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.
கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார். தொடர்ந்து வரும் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் எஸ்.பி அலுவலகத்தில் மனுகொடுக்க சென்ற பொழுது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லை. அதனால் அவருக்கு அடுத்தகட்டமாக உள்ள அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருந்தார். அனுமதி வழங்கப்படாமல் இருந்ததால், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், விஜய்யின் த.வெ.க மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியுள்ளதாகவும், மாநாடு ஜனவரிக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளார் எனவும், மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.