குரூப் 4 தேர்வில் குளறுபடிகள்: மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
|டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4- போட்டித் தேர்வுகளில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 15 லட்சத்துக்கும் கூடுதலானவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இத் தேர்வில் தேர்வுக்கூட அதிகாரிகள் அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
போட்டித்தேர்வுகளுக்கு தேர்வுக் கூட கண்காணிப்பாளர்களாக வந்தவர்களுக்கு இத்தேர்வு நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியவில்லை. அது தான் பெருமளவிலான குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும், அதற்கு வசதியாக ஒரு மணி நேரம் முன்பாக தேர்வர்கள் தேர்வுக்கூடங்களுக்கு வரவேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. சரியாக 9.00 மணிக்கு விடைத்தாள் வழங்கப் பட வேண்டும்; 9.15 மணிக்கு வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டு, அதில் உள்ள பக்கங்கள் சரியாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பிறகு, வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு சரியாக காலை 9.30 மணி முதல் தேர்வர்கள் விடைகளை எழுதத் தொடங்க வேண்டும்.
ஆனால், பல மையங்களில் தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள் காலை 9.15 மணிக்கு பிறகு தான் தேர்வுக் கூடங்களுக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் வழங்கியுள்ளனர். சில கூடங்களில் காலை 10 மணிக்குப் பிறகு தான் வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை. அனுமதிக்கப்பட்டதை விட குறைவான நேரத்தில் விடை எழுத வேண்டியிருந்ததால் பலர் சரியான விடையை தீர்மானிக்க முடியாமல், தவறான விடையை தேர்ந்தெடுத்ததும் நிகழ்ந்துள்ளது.
அதேபோல், விடை எழுதுவதற்கான நேரம் 12.30 மணிக்கு முடிவடைந்த பிறகு தான் 12.30 மணி முதல் 12.45 மணி வரை, எத்தனை வினாக்களுக்கு ஏ வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர், எத்தனை வினாக்களுக்கு பி வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற விவரத்தை பத்திவாரியாக விடைத்தாளின் முதல் பக்கத்தில் இரு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தேர்வுக்கான நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், 12.30 மணிக்குள்ளாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, விடைத்தாளின் முதல் பக்கத்தில் ஓர் இடத்தில் தேர்வர்களின் கைரேகையையும், இன்னொரு இடத்தில் கையெழுத்தையும் பதிவு செய்ய வேண்டும்; இரு இடங்களில் கண்காணிப்பாளர் கையெழுத்திட வேண்டும். இந்த பணிகளும் தேர்வு நேரம் முடிந்த பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தேர்வு நேரத்தின் போதே இந்த பணிகளை செய்ய கண்காணிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் தேர்வர்களுக்கு கவனச் சிதறலும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு பிந்தைய பணிகளை முன்கூட்டியே செய்ய கட்டாயப்படுத்துதல் போன்றவற்றால் ஒவ்வொரு தேர்வருக்கும் 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேர இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4 தேர்வு தான் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்தத் தேர்வை நடத்த 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படாதது தான் நிகழ்ந்த குழப்பங்களுக்குக் காரணம் ஆகும். சில இடங்களில் தேர்வர்கள் விடையளிக்க முழுமையாக 3 மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தேர்வர்களுக்கு 25% வரை நேர இழப்பு ஏற்பட்டிருகிறது. இது அனைவருக்கும் சமவாய்ப்பு; சமநீதி என்ற தத்துவத்திற்கு எதிரானது.
தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? எழுதிய பிறகு செய்யப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது குறித்த விவரங்கள் விடைத்தாளின் இரண்டாவது பக்கத்தில் தேர்வர்களுக்கான அறிவுரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளன. அதை தேர்வர்கள் சுட்டிக்காட்டிய போதிலும் கூட, கண்காணிப்பாளர்கள் பொருட்படுத்தவில்லை. அந்த அளவுக்குத் தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும். தேர்வர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் கடந்த 9-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு, விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மறு தேர்வு நடத்துவதற்கும் தேர்வாணையத்திற்கு அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.