78வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை கோட்டையில் இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இன்று காலை 8.45 மணிக்கு சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். .முதல்-அமைச்சருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று, தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து சுதந்திர தின விழா மேடையில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய, தகைசால் தமிழர் விருதை சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிக்கிறார்.
விருதுகள்:
சாகசத்துடன் சிறந்த பணியாற்றியவர்களுக்கும், உயிரை துச்சமாக மதித்து வீரதீர செயலை செய்தவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் விருது, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
சிறந்த பணிக்கான முதல்-அமைச்சர் விருது, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வனிதா, பொது நூலகங்கள் இயக்குனர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., சுகாதாரத் துறையைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ். ஆகியோர் பெறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியதற்காக செங்கல்பட்டு விஜயலட்சுமி, சென்னை ஜெயலட்சுமி, சூசை அந்தோணி, தூத்துக்குடி சந்தானம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியைச் சேர்ந்த சிவமலர் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
பெண்கள் நலனுக்காக சிறந்த சேவைகளைச் செய்ததற்காக சென்னை மீனா சுப்ரமணியன், மதுரை ஐஸ்வரியம் அறக்கட்டளை பாலகுருசாமி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாக செயல்பட்ட அமைப்புகளுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் 14-வது மண்டலம், கோவை மாநகராட்சி (ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்), திருவாரூர் நகராட்சி (ஆணையர் பிரபாகரன், தலைவர் புவனபிரியா), கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி ஆகியவை சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதைப் பெறுகின்றன.
முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதை, ஈரோடு கதிரவன், கன்னியாகுமரி ஜோசன் ரெகோபர்ட், கடலூர் ஜெயராஜ், நிகிதா, புதுக்கோட்டை கவின் பாரதி, விருதுநகர் உமாதேவி, ராமநாதபுரம் ஆயிஷா பர்வீன் ஆகியோர் பெறுகின்றனர்.