இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
|இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்தார்.
ராமேசுவரம்,
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற படகில் இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடலில் மாயமானார். மேலும் 2 பேரை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றுள்ளது. மாயமான மீனவர் ராமச்சந்திரனை இந்திய கடற்படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேசுவரம் மீனவரின் உடலை தமிழ்நாடு கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் விசைப்படகு மூழ்கிய சம்பவத்தில், உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் வழக்குப்பதிவு இன்றி தமிழ்நாடு திரும்பும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.