< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு - காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
16 July 2024 11:05 AM GMT

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்,

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20,500 கன அடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 5,054 கன அடியில் இருந்து தற்போது 16,577 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 43.83 அடியில் இருந்து 44.62 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 14.59 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. மேலும் குடிநீர் தேவைக்கு மேட்டூர் அணை மின் நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. காவிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 827 கனஅடியும், ஹேமாவதிக்கு 14 ஆயிரத்து 27 கனஅடியும், கே.ஆர்.எஸ்.க்கு 25 ஆயிரத்து 933 கனஅடியும், கபினிக்கு 28 ஆயிரத்து 840 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

4 அணைகளுக்கும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 56 ஆயிரத்து 626 கனஅடி நீர் வருகிறது. சட்டப்படி தமிழகத்திற்கு தற்போது வரை 40 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் சென்று இருக்க வேண்டும். ஆனால் இதுவரை 6 டி.எம்.சி. நீர் மட்டுமே சென்றுள்ளது. தமிழகத்திற்கு தினமும் 1½ டி.எம்.சி. நீர் சென்று கொண்டிருக்கிறது. தமிழக எல்லையை தொட 250 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். அதனால் நாம் திறந்துவிட்ட நீர் போய் சேரு தாமதமாகிறது. இதே போல் மழை பெய்து நீர் வந்தால் எந்த பிரச்சினையும் வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தற்போது காவிரியில் கர்நாடகம் திறந்து விடும் நீர் அளவு 36 ஆயிரம் கனஅடியை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்