< Back
மாநில செய்திகள்
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு: மூன்றே நாளில் 20 அடி உயர்ந்த மேட்டூர் அணை
மாநில செய்திகள்

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு: மூன்றே நாளில் 20 அடி உயர்ந்த மேட்டூர் அணை

தினத்தந்தி
|
22 July 2024 8:21 AM IST

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாளில் 20 அடி உயர்ந்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டின.

இதற்கிடையே கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கிற மழையை பொறுத்து 2 அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாகவும் உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 68 ஆயிரத்து 843 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரத்து 409 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 64 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 70 அடியை கடந்து 71 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்கவும், அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 18-ந் தேதி 51.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாளில் 20 அடி உயர்ந்து நேற்று 70.80 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து இதேநிலை நீடித்தாலோ அல்லது அதிகரித்தாலோ இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்