மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|கடுமையான தண்டனைகளை விதிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ந் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிகளிலும், புதுச்சோி ஜிப்மா் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.
இதையடுத்து தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அந்த சட்ட திருத்த மசோதாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ,10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம், 2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படடது. இந்த சூழலில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை விதிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா அமல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச்செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள்.
அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் 29-6-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்டமசோதா 2024 நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அச்சட்டமசோதாவிற்கு கவர்னரால் 11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தின் விவரங்கள் பின்வருமாறு:-
1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ்–
1) பிரிவு4(1) (aaa) - (1) 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்;
பிரிவு 4(1)(b) - (2) சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல்;
பிரிவு 4(1)(f)-(3) சட்டவிரோதமான மதுபான ஆலை (Illicit distillery) அல்லது மதுபான நொதிவடிப்பாலையினை (Brewery) கட்டுதல்;
பிரிவு 4(1)(h)–(4) விற்பனைக்கான சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் - ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000/- ரூபாய் வரையிலான அபராதம் என தற்போது விதிக்கப்பட்டு வரும் தண்டனை, திருத்தப்பட்ட சட்டத்தின்படி, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறைவில்லாத கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
2) பிரிவு-4(1)(aa) - ஐம்பது லிட்டருக்கு மேல் நூறுலிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 2,000/-ரூபாய் வரையிலான அபராதம் எனத் தற்போது விதிக்கப்பட்டு வரும் தண்டனை திருத்தப்பட்ட சட்டத்தின்படி, பிரிவு4(1)(B)ன்படி, இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்துஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ஒரு இலட்சம்ரூபாய் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
3) பிரிவு 4(1)ன் கீழ் ஐம்பதுலிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்; (2) சட்டவிரோதமான மதுபானம் அருந்துதல் மற்றும் வாங்குதல்; (3) மேற்கண்ட குற்றங்கள் புரிவதற்குப் பணம் செலவழித்தல்;
(4) உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 1000/-ரூபாய் வரையிலான அபராதம் என இதுவரை விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி திருத்தப்பட்ட சட்டத்தில், பிரிவு 4(1)(C)ன்படி, ஓராண்டுக்கு குறையாத மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 50,000/-ரூபாய் முதல் ஒரு இலட்சம்ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
4) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுவகை மதுபானம், வெளிநாட்டு மதுபானம், நொதிபானம் (Fermented Liquor) மற்றும் நொதித்த பழரச மதுவகை (Fermented Fruit Juice Wine)போன்ற அறிவிக்கப்பட்ட மதுபானங்களின் போக்குவரத்து, வைத்திருத்தல் மற்றும் அருந்துதல் தொடர்பான குற்றங்களுக்கு சட்டவிரோதமான மதுபானம் வைத்திருத்தல், அருந்துதல் மற்றும் போக்குவரத்து, ஆகியவற்றுக்குப் பொருந்தக்கூடிய அபராதம் விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி திருத்தப்பட்டசட்டத்தில், பிரிவு4(1)(c)-இன் வரம்புரையின்படி, ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இருபத்தைந்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
5) பிரிவு-4 (1-A)(i)ன்படிமதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை ஆயுட்காலத்திற்கு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்பட்டு வந்ததற்குப் பதிலாக, இனி ஆயுட்காலத்திற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
6) பிரிவு 4(1-A)(ii)ன்படி மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை விதிக்கப்பட்டு வந்த பத்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஏழாயிரம் ரூபாய் வரையிலான அபராதம், இனி ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.
7) பிரிவு 5ன்படி, மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சாராவியை (denatured spirit) மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால், அதற்கு இதுவரை மூன்று ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
8) பிரிவு 5ஏ-யின்படி, மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.
9) பிரிவு 6ன்படி, மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்திற்கு, ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு வந்தது. இனிமேல், திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
10) பிரிவு 7ன்படி, கூட்டுச்சதி குற்றத்திற்கு, 4ம் பிரிவின் கீழ் பெருங்குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் மற்றும் 4 ம் பிரிவின் கீழ் சிறிய குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டு வந்தன. இனி, திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 4 ம் பிரிவின் கீழ் குற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனை மற்றும் சட்டத்தின் வகைமுறைகளைத் தவிர்க்க அல்லது பயனிழக்கச் செய்ய சதி செய்ததற்காக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
11) பிரிவு 11ன் கீழ், இச்சட்டத்தில் வேறுவகையில்வகை செய்யப்படாத குற்றங்களுக்கு இதுவரை ஆறுமாதங்கள்வரை சிறைதண்டனை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் என விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி ஒராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 50,000/-ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை அபராதம் என விதிக்கப்படும்.
12) பிரிவு 24-Dயின்படி, குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்கான அதிகாரம் 10,000 ரூபாய்க்கு மேற்படாமல் ஆனால், ரூ.1000/-க்குக் குறையாமல் பெருங்குற்றங்களைத் தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட்டுக்கட்டணம் விதிக்கப்பட்டது. புதிய திருத்தச்சட்டத்தின்படி, 25,000/-ரூபாய்க்கு மேற்படாமல் ஆனால், ரூ.1000/-க்குக் குறையாமல் பெருங்குற்றங்களைத் தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட்டுக் கட்டணம் விதிக்கப்படும்.
இதுதவிர, மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.
கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணையப்பத்திரத்தைப் பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு (Executive Magistrate) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய சட்டத்தின் கீழ் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒருநபர் மீண்டும் தண்டிக்கப்படும்போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்தபின்பு, அவரது தற்போதைய வசிப்பிடப்பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்கமுடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இச்சட்டத்திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.