நான் நன்றாக இருக்கிறேன்... யாரும் பயப்பட வேண்டாம் - வீடியோ வெளியிட்ட வைகோ
|அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் வைகோ சென்னை அழைத்து வரப்பட்டார். அவருக்கு தோள்பட்டையுடன் சேர்த்து கட்டு போடப்பட்டிருந்தது. சென்னை வந்த அவர் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள இல்லத்தில் சென்று தங்கினார். இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் வைகோ, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் (அப்பல்லோ) ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வைகோ ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:-
இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து விட்டது; எலும்பு சிறிய அளவில் கீறியுள்ளது. உங்களுக்கு தற்போது ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஏறத்தாழ 7,000 கி.மீ நடந்திருக்கிறேன்; ஆனால் கீழே விழுந்ததில்லை.
நெல்லையில் நான் தங்கி இருந்த வீட்டில் நிலைகுலைந்து சாய்ந்துவிட்டேன். எனக்கு தலை, முதுகெலும்பில் அடிபட்டிருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன். நான் நன்றாக இருக்கிறேன்; முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். யாரும் பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன். முழு நலத்தோடு, பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன். எனது நலனை விழையும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.