எனக்கு அந்த பழக்கம் இல்லை - தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி
|வி.சி.க. சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை,
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு முன்னதாக திருமாவளவன் காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மட்டும் மரியாதை செலுத்தியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இது தொடர்பாக தமிழிசை கூறும்போது, "திருமாவளவன் காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மகிழ்ச்சி. ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியை தவிர்த்தார் என்று எனக்கு தெரியவில்லை.
ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ, நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை. உண்மையிலேயே மது ஒழிப்பு என்றால் அது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கை. அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதற்காக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாநாட்டில் உரையாற்றிய திருமாவளவன் இதற்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, கவர்னர் வந்த பின்னர் மாலை அணிவிக்க சொன்னார்கள். நான் உளுந்தூர்பேட்டைக்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால், காமராஜர் மண்டபத்தில் எல்லா மாலையையும் வைத்து, அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வந்தேன். ஆனால் முன்னாள் கவர்னர் தமிழிசை, திருமாவளவன் காந்தியை அவமதித்துவிட்டார், காந்தி மதுஒழிப்புக்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை.
மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். காந்தியின் கொள்கைக்கே எதிராக இருக்குமோ என்று கூறியுள்ளார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடியவர் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை நீங்கள் குடிக்க மாட்டீர்கள்; உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போன்றுதான் நானும், எனக்கு அந்த பழக்கம் இல்லை. அயல்நாடுகளுக்கு பயணம்செய்துள்ளேன் என் வாழ்நாளில் ஒரு முறை கூட அதை தொட்டதில்லை. இதை தமிழிசைக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.