காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை... ஒகேனக்கலில் தொடரும் வெள்ளப்பெருக்கு
|காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பென்னாகரம்,
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டது. மற்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 35,997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை அது வினாடிக்கு 36,674 கனஅடியாக அதிகரித்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.60 அடியை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாக இருந்தது.
இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 29,310 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 33,640 ஆக உயர்ந்துள்ளது.
கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அது நேற்று காலை வினாடிக்கு 33,625 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதுவே மாலை 4 மணிக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282.33 அடி தண்ணீர் இருந்தது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் நடைபாதைக்கும் மேலே தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
கடந்த 16-ந் தேதி 44.62 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 47.78 அடியாக உயர்ந்தது. அணையின் கொள்ளளவு 21.52 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.
நீலகிரி, கோவை
தமிழகத்தை பொறுத்த அளவில் தற்போது, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தென்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 37 செ.மீட்டர் அதிகனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, அவலாஞ்சியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நேற்றும் கனமழை கொட்டியது. குறிப்பாக, அவலாஞ்சி, தேவாலா உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செ.மீட்டர் அதிகனமழை பெய்தது. மேல்பவானியில் 22 செ.மீட்டர், தேவாலாவில் 15 செ.மீட்டர், பந்தலூரில் 14 செ.மீட்டர் மழை பதிவானது.
'ஆரஞ்சு' எச்சரிக்கை
இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில், 11 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை மழை பொழிவு இருக்கும். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், நிர்வாக ரீதியாக சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை
இதற்கிடையே, கேரளாவில் வயநாடு மாவட்டத்துக்கு மிக பலத்த மழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இதுபோல், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும்.
மீதியுள்ள 5 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யும்.