< Back
மாநில செய்திகள்
தூங்கியதால் இறங்க மறந்தார்: அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திவிட்டு வாலிபர் ஓட்டம்
மாநில செய்திகள்

தூங்கியதால் இறங்க மறந்தார்: அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திவிட்டு வாலிபர் ஓட்டம்

தினத்தந்தி
|
12 Jun 2024 3:45 AM IST

ரெயில் நின்றதும் ஒரு பெட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரெயில் பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடினார்.

விருதுநகர்,

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் நேற்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அங்கு இரண்டொரு நிமிடம் நின்றிருந்த இ்ந்த ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கினர். அதனைத்தொடர்ந்து ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டு இருந்தது. ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால், என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்தினார்.

ரெயில் நின்றதும் ஒரு பெட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரெயில் பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடினார். இது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டிக்கு வந்து, பயணிகளிடம் விசாரித்தனர். அப்போது, ராஜபாளையத்தில் இறங்க வேண்டிய அந்த வாலிபர் தூங்கிக்கொண்டு இருந்ததாகவும், ரெயில் நிலையத்தில் நின்றுவிட்டு ரெயில் புறப்பட்டு சென்றபின் எழுந்த அந்த வாலிபர், இறங்க வேண்டும் என்ற அவசரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. வாலிபரின் இந்த செயலால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரெயில்களும் சற்று தாமதமாக வந்து சென்றன.

மேலும் செய்திகள்