ஒழுங்காக முடி திருத்தம் செய்யும்படி திட்டிய பாட்டி... பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு
|ஒழுங்காக முடியை திருத்தம் செய்துவிட்டு வீட்டுக்கு வா இல்லாவிட்டால் வீட்டிற்கு வராதே என பாட்டி கடுமையாக திட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உள்ளட்டியை சேர்ந்தவர் வெங்கட்டப்பன் . இவருடைய மகன் கோவிந்தராஜ். இவர் உள்ளுகுறுக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாணவன் கோவிந்தராஜ் கடையில் முடி திருத்தம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தான்.
அந்த நேரம் அவனை பார்த்த பாட்டி அனுமக்கா, என்னடா இப்படி முடி வெட்டியிருக்கிறாய்?, ஒழுங்காக முடியை திருத்தம் செய்துவிட்டு வீட்டுக்கு வா இல்லாவிட்டால் வீட்டிற்கு வராதே என கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் மாணவரை தேடினர்.
இதையடுத்து அதே ஊரை சேர்ந்த மல்லப்பன் என்பவரின் இடத்தில் உள்ள புளிய மரத்தடியில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் கோவிந்தராஜ் மயங்கி கிடந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்தான்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முடியை ஒழுங்காக திருத்தம் செய்து வா என பாட்டி கூறியதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.