மாணவி போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
|மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு ஆபாச வீடியோ, படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (38 வயது), ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது தாயாரின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த செல்போனுக்கு அடிக்கடி தங்கப்பாண்டியன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உறவினர் ஒருவர் அந்த மாணவியிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் தங்கப்பாண்டியன் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறினார்.
இதையடுத்து மாணவியின் தாய், சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் தங்கப்பாண்டியனை கைது செய்தனர். இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.