< Back
மாநில செய்திகள்
1 மாதம் ஆட்சியை கொடுங்கள்... போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

1 மாதம் ஆட்சியை கொடுங்கள்... போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
21 Jun 2024 4:40 PM IST

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

மரக்காணம் விஷ சாராயம் பலியின்போதும், முதல்-அமைச்சர் இதே கருத்தைதான் கூறினார். கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது. இது தமிழக அரசிற்கு மிகப்பெரிய அவமானம். டாஸ்மாக் மதுவை குடித்து 'குடி' நோயாளிகளாக மாறிவிட்டார்கள். கள்ளக்குறிச்சி போன்ற விவகாரத்திற்கு தீர்வு பூரண மதுவிலக்குதான்; அதை ஒரேநாளில் கொண்டுவர வேண்டாம், படிப்படியாக கொண்டு வாருங்கள்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பாமக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை; எனவே சிபிஐ விசாரணை வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவோம் இல்லையெனில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். போதைப்பொருள் புழக்கம், கோபத்துடன் கூடிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.கள்ளசாராய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்..

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் இல்லையெனில் இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மதுவிலக்குதுறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி சமய்சிங் மீனா, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாமகவிடம் 1 மாதம் ஆட்சியைக் கொடுத்தாலேபோதும் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்