< Back
மாநில செய்திகள்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் - காவல் ஆணையர் பதில் மனு
மாநில செய்திகள்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் - காவல் ஆணையர் பதில் மனு

தினத்தந்தி
|
8 Jun 2024 3:56 PM IST

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால், சவுக்கு சங்கர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கரின் தாயார் கமலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. முன்னதாக இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி பாலாஜி, என்ன காரணத்திற்காக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதனால் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்