விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
|விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து வருகின்றனர்.
சென்னை,
விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு 11, 14, (அதாவது நேற்று) மற்றும் 15-ந்தேதி (அதாவது இன்று) ஆகிய 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்தநிலையில், இன்று பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. சிலைகளை கிரேன் மூலமாக கடலுக்கு எடுத்து சென்று, கடலுக்குள் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இன்று காலை 7 மணி முதல் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, ஒவ்வொரு கடற்கரை பகுதிகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளிலும் போலீசார் சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர். விநாயகர் சிலை கரைக்கும்போது குப்பைகள் வராமல் தடுக்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கீழே விழும் மாலைகள், பூக்களை உடனுக்கு உடன் அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான அனுமதி இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆயிரக்கணக்கான சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள், சுழலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.