விடுதலை... 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை
|இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கோட்டையில் இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இன்று காலை 8.45 மணிக்கு சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். .முதல்-அமைச்சருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று, தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் பேசிய அவர், "பன்முகத்தன்மையின் அடையாளம் தேசியக் கொடி. 77 ஆண்டுகளை கடந்து விட்டது விடுதலை இந்தியா. நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலை எளிதாக கிடைக்கவில்லை.. 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது. சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம். இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிடமாடல் அரசு செயலாற்றி வருகிறது. மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.
மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000ல் இருந்து ரூ.21,000ஆக உயர்த்தப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும்; கட்டபொம்மன், வ.உ.சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்த்தப்படும்.
விடியல் பயணம், புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வறுமையில்லாத, சமத்துவமான தமிழ்நாட்டை உருவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு திட்டத்தால் 20.73 லட்சம் மாணவர்கள் தினமும் சூடான, சுவையான உணவை சாப்பிடுகின்றனர். தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது
32,700 இளைஞர்களுக்கு அரசு துறைகளில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி மாதத்துக்குள் 75,000 அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 3 ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமூகத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறோம். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து சுதந்திர தின விழா மேடையில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய, தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவித்தார்.