< Back
மாநில செய்திகள்
பார்முலா 4 கார் பந்தயம்: இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் - அட்டவணை வெளியீடு
மாநில செய்திகள்

பார்முலா 4 கார் பந்தயம்: இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் - அட்டவணை வெளியீடு

தினத்தந்தி
|
31 Aug 2024 5:36 PM IST

பார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் 7 மணிக்கு தொடங்கும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

இந்த சூழலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் எப்.ஐ.ஏ. சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்படி எப்.ஐ.ஏ. சான்று பெறாவிட்டால் பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக முதற்கட்ட அனுமதியை எப்.ஐ.ஏ. வழங்கி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் 7 மணிக்கு தொடங்கும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இரவு 7 மணி முதல் இரவு 10.45 மணி வரை பயிற்சி போட்டிகள் நடைபெறும் என்று அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் எப்.ஐ.ஏ. சான்றிதழ் விரைந்து பெறப்பட்டு ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளநிலையில் கார்களை இயக்கி வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்