பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|பார்முலா 4 கார் பந்தயத்தில் ஐதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதல் இடம் பிடித்தார்.
சென்னை,
இந்த ஆண்டுக்கான பார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தகுதி சுற்றுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வந்தனர். இந்தநிலையில் சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது.
இந்த பந்தயத்தில், ஐதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அகமதாபாத் அணியைச் சேர்ந்த திவி நந்தன் மற்றும் மூன்றாவது இடத்தை பெங்களூர் அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் ஆகியோர் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பார்முலா 4 கார் பந்தயம் ரொம்ப சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சென்னை மக்களின் ஆதரவுடன் போட்டி சிறப்பாக நடந்தது. பார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது என நம்புகிறேன். தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இந்த கார் பந்தயம் சிறந்த இடம் பிடிக்கும். அடுத்த போட்டி குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.