< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதல் விவகாரம்: மாமியாரை கத்தியால் குத்திகொலை செய்த வாலிபர்
மாநில செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்: மாமியாரை கத்தியால் குத்திகொலை செய்த வாலிபர்

தினத்தந்தி
|
9 Jun 2024 8:34 AM IST

பொன்னேரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி வேண்பாக்கம் அடுத்த பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 40). இவரது மகள் சவுமியா (22). இவருக்கும், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விவேக் (32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

குடும்ப தகராறு காரணமாக சவுமியா கணவர் விவேக்கை பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாயுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே சவுமியாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தாய் லதாவுக்கு தெரிந்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சவுமியா வேறு ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த நபருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த விவேக் நேற்று இரவு மாமியார் லதா வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் விவேக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் லதாவின் கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளதில் லதா மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாமியாரை கொலை செய்த விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்