< Back
மாநில செய்திகள்
மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணமும் உயர்வு
மாநில செய்திகள்

மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணமும் உயர்வு

தினத்தந்தி
|
18 July 2024 7:42 PM GMT

மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.

சென்னை,

மின்சார கட்டணத்தை தொடர்ந்து மின்சார இணைப்பு சேவை கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் ரூ.2 ஆயிரத்து 145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதலே அமலுக்கு வந்தது. மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார இணைப்பு சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.

அதன்படி வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு வழங்க ரூ.1,020 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் மும்முனை மின்சார இணைப்புக்கான கட்டணம் ரூ.1,535-ல் இருந்து ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு முனை இணைப்புக்கு மீட்டருக்கான முன்பணம் (டெபாசிட் கட்டணம்) ரூ.765-ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கு மீட்டருக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2 ஆயிரத்து 45-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் மீட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஒரு முனை இணைப்புக்கு ரூ.1,020-ல் இருந்து ரூ, 1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கு ரூ,1,535-ல் இருந்து ரூ.1,610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கு ரூ.615-ல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்