திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
|திற்பரப்பு அருவிக்கு ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
குமரி,
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம், மயிலாடி, கொட்டாரம், கன்னிமார், தக்கலை, இரணியல், ஆனைக்கிடங்கு, கோழிப்போர்விளை, குழித்துறை ஆகிய பகுதிகளில் சாரல் மழையாகவும், மிதமான மழையாகவும் விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இந்த வெள்ளம் அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளம், கல் மண்டபம் ஆகியவற்றை மூழ்கடித்தவாறு பாய்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி நேற்று திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலிக்கு வெளியே நின்றவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து ரசித்தனர்.
அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது. குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.