< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து: நிதியுதவி அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து: நிதியுதவி அறிவிப்பு

தினத்தந்தி
|
31 Aug 2024 10:24 PM IST

பட்டாசு கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், குறிப்பன்குளம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், குறிப்பன்குளம் கிராமத்திலுள்ள, தனியார் பட்டாசு ஆலையில் இன்று (31-8-2024) மாலை 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் திரு.முத்துகண்ணன் (வயது21) த/பெ. கள்ளாண்ட நாடார் மற்றும் திரு.விஜய் (வயது 25) த/பெ. தங்கவேலு ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த விபத்தில் திரு.செல்வம் (வயது 21), திரு.பிரசாந்த் (வயது 20), திருமதி.செந்தூர்கனி (வயது 45), திருமதி.முத்துமாரி (வயது 41) ஆகியோர் பலத்த காயமடைந்து திருநெல்வேலி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்வதுடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்