ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
|ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கில் இன்று அதிகாலை 6 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.