< Back
மாநில செய்திகள்
உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
மாநில செய்திகள்

உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

தினத்தந்தி
|
26 July 2024 10:22 AM GMT

திருப்பூரில் உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த மலையப்பன் (வயது 49) என்பவர் 24.07.2024 அன்று மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை - திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்து கொண்டிருந்த போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்திய பின்னர் தன்னுயிர் நீத்தார்.

இந்த நிலையில், தனது உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் மலையப்பனின் குடும்பத்தினரை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது பெற்றோர் மற்றும் மகன்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.5லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

பள்ளி குழந்தைகளை காப்பாற்றி தன்னுயிர் நீத்த டிரைவர் மலையப்பனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்வின்போது, திருப்பூர் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்