'கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கைதான்' - கவர்னரின் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதில்
|கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கைதான் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஐரோப்பாவில்தான் மதசார்பின்மை என்ற கொள்கை உருவானது என்றும், இந்தியாவிற்கு மதசார்பின்மை தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவர்னரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"திருவள்ளுவருக்கு காவி அங்கியை அணிவித்த தமிழக கவர்னர், மதசார்பின்மை என்பது ஐரோப்பிய கொள்கை என்றும், அதற்கு இந்தியாவில் இடமில்லை என்றும் இப்போது கண்டுபிடித்துள்ளார்.
அவர் சொல்வது சரியென்று வைத்துக்கொண்டால், கூட்டாட்சி முறை என்பதும் ஒரு ஐரோப்பிய கொள்கையாகவே இருந்தது. கூட்டாட்சி முறைக்கு இந்தியாவில் இடமில்லை என்று அறிவித்து விடலாமா?
'ஒரு நபர், ஒரு வாக்கு' என்பதும் ஒரு ஐரோப்பிய கொள்கையாக இருந்தது. எனவே, சிலருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது என்று அறிவித்து விடுவோமா?
ஜனநாயகம் என்பது மன்னர்களால் ஆளப்பட்ட இந்தியாவுக்குத் தெரியாத ஒரு ஐரோப்பிய கொள்கையாகும். இந்த நாட்டில் ஜனநாயகம் குலைக்கப்படும் என்று அறிவித்து விடுவோமா?"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.