< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி தந்தை, மகன் மரணம் குறித்த சந்தேகத்தை அரசு போக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி தந்தை, மகன் மரணம் குறித்த சந்தேகத்தை அரசு போக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
24 Aug 2024 12:44 PM IST

கிருஷ்ணகிரியில் தந்தை மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான போலி என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமார் ஆகியோர் சில மணி நேர இடைவெளியில் இறந்தது குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி 15-வயது பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்யும்போது தப்பி ஓட முயற்சித்த நிலையில் தடுமாறி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிவராமனை பரிசோதனை செய்ததில் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் எலி மருந்து சாப்பிட்டது தெரிய வந்துள்ளதாகவும், பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 23-08-2024 அன்று காலை உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்திலிருந்தே இது ஒரு கட்டுக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையில், சிவராமனின் தந்தை அசோக்குமார் அவர்கள் 22-08-2024 அன்று இரவு 11-30 மணிக்கு மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாரதவிதமாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. சில மணி நேர இடைவெளியில் தந்தையும், மகனும் இறந்தது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது.

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கின் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம மரணங்களைப் போலவே இந்த வழக்கிலும் மர்ம மரணங்கள் ஏற்பட்டுள்ளதோ என்ற எண்ணமும், இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர்களை தப்பிக்க வைக்க இதுபோன்றதொரு நாடகத்தை தி.மு.க. அரசு அரங்கேற்றுகிறதோ என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

மக்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சருக்கு உண்டு. எனவே முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கிற்கென அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் மூலம் மக்களின் சந்தேகங்களை போக்கி, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்