குடும்ப தகராறு: 9 மாத பெண் குழந்தையை நடுரோட்டில் வீசி கொன்ற தந்தை
|கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 மாத பெண் குழந்தையை நடுரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சிவாஜி மகன் விக்கி என்ற விக்னேஷ்(வயது 24). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த இருளாண்டி மகள் நாகசக்தி (21). இவர்கள் இருவரும் 3 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். மேலும் 9 மாதத்தில் நிதன்யாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நாகசக்தி கோபித்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி தங்கி இருந்த வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தன்னுடைய 2 வயது மகனை மட்டும் தூக்கிக்கொண்டு நாகசக்தி அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த 9 மாத பெண் குழந்தையை தூக்கி நடுரோட்டில் வீசி எறிந்தார். இதில் பிஞ்சு குழந்தை படுகாயங்களால் அலறி துடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை வித்யாஸ்ரீ பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி விசாரணை நடத்தி ெகாலை வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தார்.