போலி என்.சி.சி. முகாம்: கிருஷ்ணகிரியில் மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு
|கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தனியார் பள்ளி முதல்வர், தாளாளருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தனியார் பள்ளி முதல்வர், தாளாளருக்கு ஜாமீன் தரக் கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய பள்ளி மாணவிகள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர் சாம்சன்வெஸ்லி (வயது 52), தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் (40), ஆசிரியை மார்கரேட் ஜெனிபர் (35) உள்பட 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் முனியப்பராஜ் ஆஜராகி, "கிருஷ்ணகிரியில் மேலும் 2 பள்ளிகளில் இதுபோல போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதுகுறித்தும் 2 புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. புலன்விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் அளிக்கும்போது, அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். இது போக்சோ சட்டத்தின்படி தீவிர குற்றமாகும். அதனால், யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிட்டார்.
இதையடுத்து, விசாரணையை வருகிற அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.