தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
|நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சேவையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை, மே மாதம் வரை இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண். 06012) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வ.எண். 06011) ஜூன் 3, 10, 17, 24 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
இதுபோல், அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சேவையும் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் (வ.எண். 06030) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வ.எண். 06029) ஜூன் 3, 10, 17, 24 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.