காலாண்டு விடுமுறை நீட்டிப்பா?: இன்று அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் தகவல்
|காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் வேண்டும். காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்குகிறது. அதன்பின்னர் வெள்ளிகிழமை மட்டுமே பள்ளிகள் இயங்கும். மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளை இணைத்து பள்ளி விடுமுறை நாட்களாக அறிவித்தால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை கிடைக்கும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க, காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். பின்னர் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்" என்று கூறினார்.