சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்
|இன்றைய சட்டசபை கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், இரு நாட்களாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விஷ சாராய விவகாரம் தொடர்பாக நேற்றைய அவை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்த அ.தி.மு.க., மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்த நிலையில், இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்றைய கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விஷ சாராய விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.