வெளிநாடு சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் - அண்ணாமலை பேட்டி
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்3 மாத உயர் படிப்புக்காக இன்றிரவு இங்கிலாந்து செல்கிறேன். அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுக்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும்.
ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பேன். எங்களது கருத்துக்கள் தொடர்ந்து அறிக்கை வாயிலாக வந்து கொண்டே இருக்கும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை.
3 ஆண்டுக்கு முன்னால் நான் 10 ஆண்டுகள் காவல்துறையில் இருந்தேன். அதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள். 10- 15 ஆண்டுகள் விவசாயியாக இருந்திருக்கிறேன். மாணவனாக இருந்திருக்கிறேன். இதெல்லாம் அனுபவம் இல்லையா?எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது. என்னை தரக்குறைவாக பேசுவார்கள். ஆட்டை வெட்டுவார்கள். இதெல்லாம் சரியா?
39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால் 70 வயது பழனிசாமி பேசியது சரியா? இதற்கு ஜெயக்குமார் விளக்கம் கொடுக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் டை அடித்துக் கொண்டு தங்களை இளைஞர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். பிரதமரின் விருப்பமே இளைஞர்கள் வர வேண்டும் என்பதுதான். பாஜகவில் 35 வயதுக்கு மேல் ஒரு நாள் ஆனாலும் அவர்கள் இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருக்க மாட்டார்கள். இதை 3 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறோம்.
ஆனால் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிக்கு 50 வயது. முதல்-அமைச்சர் எத்தனை ஆண்டு இளைஞர் அணி தலைவராக இருந்தார்? மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது துரதிருஷ்டவசமான ஒரு நிகழ்வு இதற்கு நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.
செப்.1 முதல் உறுப்பினர் சேர்க்கையை பா.ஜனதா தீவிரப்படுத்த உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜனதா பயணம் மேற்கொள்கிறது. பா.ஜனதா தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இணையலாம். கட்சி வளர வேண்டும் எனில் தனியாத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.