"கிணற்றுத்தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்" - அண்ணாமலை
|நாணய வெளியீட்டு விழா தொடர்பாக அ.தி.மு.க. அரசியல் பேசுவது வேதனை அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத்தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "நாணய வெளியீட்டு விழா தொடர்பாக அதிமுக அரசியல் பேசுவது வேதனை; ஜெயலலிதாவுக்கு இதேபோல் மரியாதை செலுத்த அதிமுக விரும்பினால் அனுமதி தரப்படும்.
எதிரும், புதிருமாக இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பது அரசியல் நாகரிகம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கட்சியிடம் சொல்ல முடியாது. நான் கட்சியின் தலைவராக இருந்தாலும் அடிப்படையில் நான் தொண்டன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என மத்திய அரசு முடிவு செய்த பிறகு மாநில பா.ஜ.க. முழு ஒத்துழைப்பை கொடுப்பது கடமை. இதில் நாங்கள் அரசியல் கலக்கவில்லை.
2017ல் பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி இல்லாத சமயத்தில் அப்போதைய அ.தி.மு.க. அரசு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என அனுமதி கோரிய போது மத்திய அரசு அனுமதித்தது. 2019ல் பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி இருந்த சமயத்தில் தான் அந்த நாணயத்தை அ.தி.மு.க. வெளியிட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பதையெல்லாம் பார்க்கவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை எது செய்தாலும் அரசியலாக பேசுவது வழக்கமாகிவிட்டது. நேற்று அரசு விழாவில் மத்திய அரசின் சார்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டத்தில் எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சி. மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் அரசியல் பேசுவது வேதனைக்குரியது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.