வாயில் வடை சுடுகிறார்... நம்பிக்கை துரோகி... எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை கடும் மோதல்
|நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி,
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்தது. அப்போது இருந்தே அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக வார்த்தை யுத்தம் நடத்தி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அண்ணாமலை வந்த பிறகுதான் பா.ஜ.க-வுக்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். பா.ஜ.க. தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்?. தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விக்கிரவாண்டியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அ.தி.மு.க. சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அ.தி.மு.க. அழிந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கே பொருந்தும். நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அவர் கூறினார்.