தொடர் மழை எதிரொலி: 100 அடியை எட்டிய பாபநாசம் அணை நீர்மட்டம்
|மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
நெல்லை,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பலத்த மழையாக பெய்து வருகிறது. இதையொட்டி கேரளாவை ஒட்டி அமைந்துள்ள தமிழக எல்லையோர பகுதியில் அதாவது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதிககளில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் மதியம் வெயில் சுட்டெரித்தது. இருந்த போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து சீராக உள்ளது.
இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து 100 அடியை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு 2,577 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 805 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனுடன் இணைந்த 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 115 அடி ஆனது.
இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.64 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 567 கன அடியாகவும், வெளியேற்றம் 400 கன அடியாகவும் உள்ளது. 52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 கன அடியாகவும், வெளியேற்றம் 20 கன அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 85 அடி கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 59 அடியாகவும், 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும் உள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி விட்டதால், அணைக்கு வருகிற 81 கன அடி தண்ணீர் அப்படியே உபரிநீராக மறுகால் பாய்கிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 90 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 23 கன அடியாகவும், வெளியேற்றம் 2 கன அடியாகவும் உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பாபநாசம்-9, சேர்வலாறு-1, மணிமுத்தாறு-1, மாஞ்சோலை-9, காக்காச்சி-24, நாலுமுக்கு-32, ஊத்து-33, கடனாநதி அணை-2, ராமநதி-6, கருப்பாநதி-4, குண்டாறு-2, அடவிநயினார்-15, செங்கோட்டை-2, தென்காசி-4.