< Back
மாநில செய்திகள்
இரட்டை ரெயில் பாதை: தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி...
மாநில செய்திகள்

இரட்டை ரெயில் பாதை: தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி...

தினத்தந்தி
|
16 Jun 2024 10:44 AM IST

வருகிற 20-ந் தேதி இரட்டை ரெயில் பாதையை பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் மொத்தம் 4027.08 கி.மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே இருப்பு பாதை வழித்தடங்கள் உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து மதுரை வரை உள்ள 490 கி.மீ பாதை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள பாதையை இருவழிப்பாதையாக மாற்ற மதுரை-வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி வரை 159 கி.மீட்டர் தூரம் வரை ஒரு திட்டமாகவும், வாஞ்சி மணியாச்சி- திருநெல்வேலி- நாகர்கோவில் வரை 102 கிலோ மீட்டர் ஒரு திட்டமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில்வே பாதை பணிகள் முடிவடைந்தன. வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையிலான பணிகளும், கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகளும் முடிவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது.

இதனால் கன்னியாகுமரி-சென்னை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து உள்ளதால், கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக நாகர்கோவில்-சென்னை இடையே வந்தே பாரத் ெரயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி வருகிற 20-ந் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரட்டை ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த அறிவிப்பு பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த வந்தே பாரத் ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி சந்திப்பு, நாகர்கோவில் சந்திப்பு இடையே இயக்கப்படும் என தெரிகிறது.

பணி நிமித்தமாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் சென்னைக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு போதிய ரெயில் வசதி இன்னும் இல்லை. இந்தநிலையில் நாகர்கோவில்-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருப்பது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. திருநெல்வேலி-சென்னை இடையே தற்போது தினசரி வந்தே பாரத் ரெயில் உள்ளது. அந்த ரெயிலை தான் நாகர்கோவில் சந்திப்பு வரை நீட்டிக்கப்படுமா? அல்லது சென்னை- நாகர்கோவில் வரை புதிய வந்தே பாரத் ரெயில் வருமா? என்பது பற்றிய அறிவிப்புகள் இன்னும் முழுமையாக வரவில்லை என அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்