தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரரிடம் கொஞ்சி விளையாடிய நாய் - வீடியோ வைரல்
|கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நாயை தீயணைப்பு வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
கோவை,
நாய்...நன்றியுள்ள ஜீவன் என்பது அனைவருக்கும் தெரியும். அதை மெய்ப்பிக்கும் வகையில், கிணற்றில் தவறி விழுந்த தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடன் நாய் ஒன்று கொஞ்சி விளையாடிய சம்பவம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நடந்து உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கிணத்துக்கடவு அருகே காரச்சேரி கிராமத்தில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது. ஆனால் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இருந்தாலும், உள்ளே விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த நாய் குரைத்துக்கொண்டே இருந்தது. இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர் ஒருவர், கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அந்த நாயை பத்திரமாக மீட்டு, வெளியே கொண்டு வந்தார். பின்னர் உரிமையாளரான கருப்பசாமி என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றார்.
ஆனாலும் அவரை பிரிய விரும்பாத அந்த நாய், தன்னை காப்பாற்றிய வீரருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருடன் கொஞ்சி விளையாடியது. மேலும் அவரை அங்கிருந்து செல்ல அனுமதிக்காமல் கால்களை சுற்றி சுற்றி வந்து முத்த மழை பொழிந்தது. இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. பின்னர் அந்த நாயை பாசத்துடன் தடவி கொடுத்த தீயணைப்பு வீரர் பிரியாவிடை பெற்று சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.