< Back
மாநில செய்திகள்
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
19 July 2024 12:03 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம் 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சூழலில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது" என்று வாதிட்டார்.

தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என்று தெரிவித்த நீதிபதிகள் சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்பு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்