< Back
மாநில செய்திகள்
அவதூறு பேச்சின் ஆதித்தாய் தி.மு.க.தான் - சீமான் பேட்டி
மாநில செய்திகள்

அவதூறு பேச்சின் ஆதித்தாய் தி.மு.க.தான் - சீமான் பேட்டி

தினத்தந்தி
|
13 July 2024 1:15 PM IST

நாகரீக அரசியல் குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எழுந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அனுப்ப கோர்ட்டு மறுப்பு தெரிவித்து சாட்டை துரைமுருகன் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த சீமான், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது கருணாநிதியை எங்கே அவர் அவதூறாக பேசினார்? அவர் பாடியது ஏற்கெனவே இருந்த பாட்டுதானே? நானும் அதே பாட்டை பாடுகிறேன். இப்ப நான் பாடிவிட்டேன், என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம் என ஆவேசமாக பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், "மறைந்த முதல்வர் கலைஞர் குறித்த சீமானின் பேச்சை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது. சீமான் அரசியல் தலைவருக்கே தகுதியானவர் அல்ல. எங்களது தலைவர் குறித்து பேச அவருக்கு அருகதை கிடையாது" என்று கூறினார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அவதூறு பேச்சின் ஆதித்தாய் தி.மு.க.தான்; இந்திரா காந்தி, ஜெயலலிதா குறித்து தி.மு.க. அவதூறாக பேசியிருக்கிறது. இழிவாக பேசுவதற்கு என்றே ஆட்களை வைத்திருந்தது தி.மு.க.தான். நாகரீக அரசியல் குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை. சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பதே எனக்கு தெரியாது.

சளுக்கர்கள், சண்டாளர்கள் என்ற வார்த்தைகளை எல்லாம் அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதிதான். சங்க இலக்கியங்களில், மந்திரங்களில் சண்டாளர்கள் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தில் சண்டாளர்கள் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. சண்டாளர்கள் என்று நாங்கள் பாடவில்லை. அந்த பாடலை எழுதி வெளியிட்டது அ.தி.மு.க.தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்