நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எதையும் செய்யவில்லை: எடப்பாடி பழனிசாமி
|நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சேலம் அருகே குப்பதாசன்வளவு பகுதி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும்தான். நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக இரட்டை வேடம் போடுகிறது.
ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை வெளியிடவில்லை.
நீட் ரத்துக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கடிதங்களை மக்கள் காலடியில் போட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?, அதனால் மாணவர்களுக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டதென தெரியவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.