< Back
மாநில செய்திகள்
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. இன்று உண்ணாவிரதம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. இன்று உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
6 July 2024 6:35 AM IST

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது.

சென்னை,

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது. இதில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இது தொடர்பாக, தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய திருநாட்டினை, "காவல்துறை ஆட்சி நாடாக" மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான மத்திய பா.ஜனதா அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி மு க சட்டத்துறையின் சார்பில், சென்னையில் இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த போராட்டத்துக்கு கட்சியின் சட்டத் துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ எம் பி தலைமை தாங்குகிறார்.

அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், தி மு க சட்டத்துறைத் தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம் எல் ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டத்துறை இணைச்செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்று பேசுகிறார்.

கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கிவைக்கிறார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை எம் எல் ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி மு க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ, தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் பி.வில்சன் எம்.பி., சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் இரா.கிரிராஜன் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

தி மு க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. நிறைவுரை ஆற்றுகிறார். சட்டத்துறை துணைச் செயலாளர்கள் ஜே.பச்சையப்பன், கே.சந்துரு ஆகியோர் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.

இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற தி மு க வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், கட்சியின் வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி முன்னணியினர், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மத்திய பா.ஜனதா அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்