திமுக அரசைக் கண்டித்து 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்
|தே.மு.தி.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தன.
இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் ஜூன் 25ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக ஜூன் 25, செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.
இதில் மாவட்ட கழக செயலாளர்கள் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.